பல நெட் விமர்சனங்களை படித்துவிட்டு விகடன் எழுதிய விமர்சனம்.
இது கமல்ஹாசனின் 'டென் மேன் ஷோ!'
பறவைப் பார்வையில் அந்த ஆரம்பப் பத்து நிமிடங்கள்... அசத்தல்! மற்றபடி, தமிழ் சினிமாவுக்குப் பழக்கமான, ரொம்ப வழக்கமான சேஸிங் ரேஸிங் கதை. அதில் பத்து கமல்கள் பங்கெடுத்திருப்பது மட்டுமே புதுசு!
கி.பி.12ம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம்இருந்து பெருமாளைக் காப்பாற்ற முடியாமல் கடலுக்குள் மடிகிறார் வைணவக் கமல் (ரங்கராஜன் நம்பி). கி.பி.21ம் நூற்றாண்டில் அமெரிக்க விஞ்ஞானி கமல் (கோவிந்த் ராமசாமி) கண்டுபிடித்த உயிர்க்கொல்லிக் கிருமியைக் கவர்ந்து தீவிரவாதிகளிடம் விற்க, அமெரிக்க வில்லன் கமல் (கிறிஸ்டியன் ஃப்ளெட்சர்) துரத்தி வருகிறார். குழப்பக் குளறுபடிகளில் வைரஸ் அமெரிக்காவிலிருந்து சிதம்பரத்துப் பாட்டி கமலிடம் (கிருஷ்ணவேணி) வந்து சேருகிறது. கிருமி விவகாரம் அமெரிக்க ஜனாதிபதி கமல் (ஜார்ஜ் புஷ்!) வரை போகிறது. இங்கே இந்திய ரா அதிகாரி தெலுங்கு கமலிடம் (பல்ராம் நாயுடு) வழக்கு விசாரணை ஒப்படைக்கப்படுகிறது. இவர்களுக்கிடையிலான கண்ணாமூச்சி விளையாட்டின்போது பாடகர் கமல் (அவ்தார் சிங்), ஜப்பான் கமல் (ஷிங்கென் நரஹசி), சமூக சேவகர் கமல் (வின்சென்ட் பூவராகன்), எட்டடி முஸ்லிம் கமல் (கலிஃபுல்லா கான்) ஆகியோரும் வலம் வருகிறார்கள். க்ளைமாக்ஸில் கொடிய வைரஸிடமிருந்து 'டிசம்பர் 26' சுனாமி... உலகத்தைக் 'காக்கும்' திடீர் டிவிஸ்ட்!
கமலின் 'அவதாரங்கள்'?
இன்னும் வயதான 'அவ்வை சண்முகி', கொஞ்சம் இளமையான 'இந்திரன் சந்திரன்' மேயர், 'எனக்குள் ஒருவன்' நேபாளி சாயல் ஜப்பான் கமல் என 'வித்தியாச வலம்' வந்த கமல்களின் ஒட்டுமொத்த கலெக்ஷன்தான் படம் முழுக்க. இவற்றில் அசரடிக்கிற முதல் மூன்று இடங்கள்... நம்பியின் மிரட்டும் நடிப்பு, பல்ராம் நாயுடுவின் அசட்டு நகைச்சுவை, மிக முக்கியமாக வின்சென்ட் பூவராகன். தவிர, வெரைட்டியில் வெளுத்தெடுத்திருப்பது... வில்லன் கமல்!
ஆவேச ஆத்திகரான ரங்க ராஜன் நம்பி சில நிமிடங்களே வந்தாலும் ரணகள ரௌத்ரம். தெலுங்கு ரிங்டோனுக்கு இடுப்பை அசைக்கும் குறும்பாகட்டும், 'நீரு தெலுங்கா..?' என்று புத்திசாலி 'நரசிம்ம ராவை'ப் பாசமாக விசாரிப்பதாகட்டும், பல்ராம் நாயுடு... ஜாலி கோலி!
''மக்களே, என்ன சொல்லுதீய..?'' என்று நாகர்கோவில் தமிழில், மணல் கொள்ளையர்களோடு மல்லுக்கட்டும் வின்சென்ட் பூவராகனின் நடை, பார்வை, பேச்சு என இந்தப் பாத்திரத்துக்கான கமலின் உழைப்பு உலகத் தரம்! டமால் டுமீல் சாகசத்தில் ஃப்ளெட்சர் பதறடித்தாலும் 'அத்தனை பெரிய' தலை உறுத்துகிறது. ஜப்பான் ஷிங்கென் நரஹசி, பக்கா ஜப்பானியர்! பேயறைந்தது போல இருந்தாலும் ஜார்ஜ் புஷ்ஷின் அசட்டுக் குறும்புகள் ரசிக்கும் ரகம். பாட்டியின் சேட்டைகள் சமயங்களில் கிச்சுக்கிச்சுகிறது. அவ்தார் சிங்கும் கலிஃபுல்லா கானும் எண்ணிக்கைக்கு உதவிஇருக்கிறார்கள். இத்தனை கதாபாத்திரங்களின் கனத்தைத் தாங்கிய சுவடே இல்லாமல், பெருமாள் புலம்பலுடன் திரியும் அசினுடன் ஓடிக்கொண்டே இருக்கிறார் 'நார்மல்' கமல்!
உடல் மட்டுமல்லாமல் குரலும் பிரமாதப்படுத்த, 'டாப் டென்' இடங்களையும் கமலே பிடித்துக்கொண்டதால் அசின், மல்லிகா ஷெராவத் முதல் நாகேஷ் வரை அனைவருக்கும் கிடைக்கும் சைக்கிள் கேப்களில் ஷேர் ஆட்டோ விட வேண்டிய அவஸ்தை. 'ச்சொன்னாக் கெளு. சாப்ட்ரு அண்ணாத்தே!' என்று மழலைத் தமிழ் பேசும் ஜப்பானியப்பெண்ஆன் மட்டும் சின்னதாக ஈர்க்கிறார்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவும் தணிகாசலத்தின் படத் தொகுப்பும் அழகான ஆக்ஷன் வைட்டமின்கள். ஜப்பான் அமெரிக்க ஸ்டைல் க்ளைமாக்ஸ் சண்டை செம சூடு. வாலியின் 'கல்லை மட்டும் கண்டால்..!' பாடல் வரிகளில் அத்தனை உக்கிரம். மற்றபடி, ஹிமேஷின் பாடல் இசையும் தேவி ஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும் அத்தனை சுகமில்லை!
பத்து அவதாரங்களில் சரிபாதி மேக்கப் முகங்கள் சற்றும் பொருந்தாததால், மாறுவேடப் போட்டி உணர்வுதான் ஏற்படுகிறது. தவிர, சர்க்கஸ் பார்க்கிற உற்சாகத்துடன் ஃப்ரேம்களில் வருகிற கமல்களைத் தேடுகிற ஆர்வத்திலேயே நேரம் செலவாகி விடு கிறது.
ஒரு வழக்கமான காமெடி ஆக்ஷன் கதை... சைவ வைணவ விவகாரம், பயோ வார், ஜார்ஜ் புஷ்ஷின் அச்சுப்பிச்சு, மணல் கொள்ளை, இயற்கைச் சீற்றம் எனப் பல தளங்களில் பயணிப்பதால் சாமான்ய ரசிகன் குழம்பிப் போவான்.
பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட சுனாமியை இப்படி ஒரு கோணத்தில் அணுகலாம் என்ற ஒரு புள்ளிதான் கதை. ஆனால், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, ஊரே துடிதுடித்துத் திரியும் சூழலில், கமலும் அசினும் காதல் பேசுவது... ஸாரி!
ஆக்ஷன் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாதுதான். மலையளவு உப்பால் மட்டுமே (அதாங்க... என்.ஏ.சி.எல்), அந்தக் கிருமியை அழிக்க முடியும் என்றால், தமிழ கத்தையே 48 மணி நேரத்தில் அழித்துவிடக்கூடிய கிருமியை லூஸ§ப் பெண் அசினிடம் இருந்து வாங்க முடியாமல் க்ளைமாக்ஸ் வரை அலைவாரா சமூகப் பொறுப்பு உள்ள ஒரு விஞ்ஞானி?
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சுனாமி சம்பவத்தில் உயிர்க்கொல்லிக் கிருமியை அழித்து ஆறே நாட்களில் தமிழகத்தைக் காப்பாற்றிய கமலுக்கு, ஆற அமர கலைஞர் அரசு பாராட்டு விழா நடத்துவது இன்னும் படா காமெடி!
இருந்தாலும், ஒன்றுக்குப் பத்தாக வரும் கமல்களுக்குத் தீனி போடுவதிலேயே பெரும் கவனத்தைச் செலவிட்டதாலோ என்னவோ, கதை லாஜிக்கிலும் திரைக்கதை மேஜிக்கிலும் கிராஃபிக்ஸ் நேர்த்தியிலும் ஆங்காங்கே சறுக்கல்கள்.
நம்பியின் நடிப்பாளுமை, சமூகப் போராளியான வின்சென்ட் பூவராகனின் புயல் கோபம், பத்து கேரக்டர்களுக்கும் விதவிதமான குரல் மாற்றம் என கமலின் உழைப்பு... சம காலத் தமிழ் சினிமாவின் பிரமிப்பு!
பிகு:
குருவி - 39/100
சண்டை - 39/100
அரசாங்கம் - 41/100
அ.எண் 305ல் கடவுள் - 42/100
யாரடி நீ மோகினி - 42/100
கண்ணும் கண்ணும் - 42/100
சந்தோஷ் சுப்பிரமணியம் - 44/100
No comments:
Post a Comment