கடந்த மாதம் நெய்வேலியிலிருந்து ஏழு ஆன்மிக அன்பர்கள் புவனேஸ்வரம், பூரி, வைத்திய நாதம் ,அலஹாபத் மற்றும் வாரணாசி ஆகிய புண்ணிய ஸ்தலங்களுக்கு ஆன்மிக பயணம் சென்று வந்தோம்.
புறப்பாடு:அக்டோபர் 24 ம் தேதி சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு சென்னை புகை வண்டி நிலையத்திலிருந்து புவனேஸ்வர் வழியாக செல்லும் கோரமண்டல் துரித வண்டியில் புறப்பட்டோம். இரண்டு அடுக்கு குளிர்சாதன பெட்டி மிகவும் வசதியாக இருந்தது. மதிய உணவும் இரவு உணவும் எங்கள் குழுவினர் கொண்டு வந்திருந்த அருமையான புளி சாதமும் , எலுமிச்சை சாதம் , தயிர் சாதம் , துவையல், ஊறுகாய் ஆகியவை உண்டோம் .இரயிலில் கொடுக்கும் உணவு நன்றாக இல்லை. அத்துடன் விலையும் மிக அதிகம்.
அன்று பகல் மற்றும் இரவு முழுவதும் இரயில் பயணம் தான். ஒங்கோல் , விஜவாடா, ராஜமுந்திரி, விசாகபட்டினம் குர்தார் ரோடு ஆகியவற்றை கடந்து விடியற் காலை 4 .30 மணிக்கு புவனேஸ்வர் வந்து சேர்ந்தோம். இரயில் நிலையத்தில் உள்ள ஒய்வு அறையில் சிறிது ஒய்வு எடுத்துவிட்டு காலைகடன்களை முடித்துவிட்டு குளித்து விட்டு அன்றைய பயணத்தை தொடங்கினோம்.
காலை 7 மணிக்கு ஒரு வாடகை காரை அமர்த்திக்கொண்டு பயணத்தை தொடங்கினோம்.முதலில் புவனேஸ்வரத்தில் உள்ள கோவில்களுக்கு சென்றோம். லிங்கராஜா கோவில் - பெரிய சிவன் கோவில்,அதன் அருகில் உள்ள கலை நுணுக்கம் மிகுந்த முக்தீஸ்வரர் கோவில், கலை நுணுக்கம் மிகுந்த அழகிய தோட்டத்துடன் கூடிய ராஜாராணி கோவில் மற்றும் பிரமேஷ்வர் கோவில் ஆகியவற்றுக்கு சென்றோம்.அங்கு நாங்கள் பார்க்க முடியாமல் போன இடங்கள் ராம் மந்திர் நந்தன் கண்ணன் பார்க் மற்றும் கந்தகிரி உதயகிரி குகைகள்.
பின்னர் தௌளகிரி சென்றோம்.இது கலிங்க போர் நடந்த தயா ஆற்றின் அருகில் உள்ள சிறிய குன்றின் மேல் உள்ளது. இங்கு அசோகர் கலிங்க போருக்கு பின்னர் மனம் திருந்தியதன் நினைவாக ஜப்பானியர்களால் கட்டபட்டுள்ள மிக அழகிய புத்த விகாரம் உள்ளது.அதன் அருகில் உள்ள அழகிய கோவிலுக்கும் சென்றோம்.அங்கு வாசனை மற்றும் மசாலா பொருட்கள் விலை மலிவாக வாங்கினோம்.
அங்கிருந்து உலக புகழ் பேற்ற கோனார்க் கோவில் பார்க்க புறப்பட்டோம். வழியில் பிப்பிலி என்னும் ஊரில் அழகிய மலிவான கைவினை பொருட்கள் வாங்கினோம்.
No comments:
Post a Comment