சென்ற மாதம் மூன்று முறை மருத்துவமனையில் பெட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை/பரிசோதனை செய்துகொண்டேன்.அதில் கற்றுக்கொண்ட பாடங்கள் பல. நண்பர்கள், பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள், உறவினர்கள் , கூட வேலைபார்பவர்கள் ஆகியோரை பற்றி புரிந்துகொள்ள அது மிகவும் நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.
உதவி கேட்காமலே தாமாக வந்து உதவி செய்தவர்கள், மருத்துவமனை வந்து பார்த்தவர்கள், போனிலேயே விசாரித்தவர்கள், ( உடல் நிலையை காரணம் காட்டி அலுவலகத்தில் ஏதேனும் சலுகை பெற்றுவிடுவேனோ என்று எண்ணி அதெல்லாம் ஒன்றும் இல்லை, எல்லோருக்கும் ECG இல் ஏதேனும் பிராபளம் இருக்கும் , வயதானால் அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும், எனக்கு கூடத்தான் 30 % அடைப்பு இருக்கும் என்றெல்லாம் சொல்லியவர்கள் என்னுடைய மாத்திரையை நீங்களும் சாப்பிடுங்கள் என்று நான் சொன்னபோது விழித்தவர்கள்). உள்ளபடியே நல்ல அறிவுரை சொல்லியவர்கள் என பலரையும் அடையாளம் காண முடிந்தது.
முதலில் கால் மூட்டு வலியுடன் கூடிய கடுமையான காய்ச்சலுக்காக விடியற்காலை 4 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் உடனே அட்மிட் செய்து பெட்டில் படுக்க வைத்து வைத்தியம் செய்து 15 மணி நேரத்தில் காய்ச்சலை குறைத்து விட்டார்கள். ஆனாலும் கால் மூட்டு வலி இருந்தது.மற்ற பரிசோதனை முடிவுகள் வர தாமதம் ஆனதால் மொத்தம் 5 நாட்கள் அங்கு இருந்தபின்னர் டிஸ்சார்ஜ் செய்தார்கள்.ஆனாலும் ECG இல் சிறு மாறுதல் உள்ளதாலும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாலும் சென்னை சென்று கார்டியாலஜி பிரிவில் விரிவான பரிசோதனை செய்ய பரிந்துரை செய்தார்கள்.
பின்னர் சில நாட்கள் கழித்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல பரி சோதனைகளை செய்து இதயத்துக்கு இரத்தம் கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு உள்ளது என்று சொல்லி அஞ்சியோ பரிசோதனை செய்துகொள்ள சொன்னார்கள். எனக்கு பயமாக இருந்ததால் ஊருக்கு சென்று பின்னர் வருகிறேன் என்ற மருந்து மட்டும் வாங்கி வந்த பின்னர் இங்குள்ள மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மறுபடியும் சென்னை சென்றேன்.
முன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு அஞ்சியோ செய்தபோது ஒரு இரத்த குழாயில் 30 % அடைப்பு உள்ளது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்க்கான மாத்திரைகளுடன் தினசரி காலையில் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தையும் , எண்ணெய் , உப்பு சேர்க்காத உணவையும் கடைபிடிக்க அறிவுறுத்தினார்கள்.
தினமும் அடிக்கடி ஏதேனும் நொறுக்கு தீனியை உண்ணும் எனக்கு முழு தடா உத்தரவு போட்டுவிட்டார்கள்