Sunday, September 26, 2010

சோழனின் பெரியகோயிலும்.. சேரனின் நுழைவாயிலும்!

தஞ்சைப் பெரிய கோயிலை சோழ மன்னனான ராஜராஜன் உருவாக்கியிருந்தாலும், அக் கோயிலில் சேர நாட்டின் கலைப்பாணியையும் உள்ளடக்கியிருந்த கட்டுமானங்கள் உள்ளது தற்போதைய ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னன் ராஜராஜனின் கல்வெட்டுகளில் கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் என இரண்டு கோபுரங்களைக் குறிப்பிடுகின்றன. அதைப் போலவே அப்பேரரசின் மற்றொரு கல்வெட்டு இந்தக் கோயிலில் உள்ள அணுக்கன் திருவாயில் என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறது. இது திருமதிலின் வடமேற்குப் பகுதியில் வடபுறத் திருவாயிலாகும். இவ்வாயில் பற்றியும், திருச்சுற்று மாளிகையின் மேற்கு மற்றும் தெற்கு மதில்களில் உள்ள மற்ற மூன்று வாயில்கள் பற்றியும் இதுவரைக் கட்டடக் கலை வல்லுநர்களால் ஆராயப்பட்ட எந்த ஒரு கருத்தும் வெளியிடப்படவில்லை.
அணுக்கன் திருவாயிலும் மற்ற மூன்று வாயில்களும் ராஜராஜன் திருவாயில் போன்று தமிழக பாணி கோபுரங்களாக அமையாமல், சேர நாட்டுக் கோபுர கலைப் பாணியில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளோடு திகழ்ந்திருக்க வேண்டும் என்பதைக் கட்டுமான அமைப்பின் மூலம் உணரமுடிகிறது.
இந்த நான்கு வாயில்களில் அணுக்கன் திருவாயிலே மிகுந்த எழிலோடு படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்பதை அங்கு காணப்படும் எச்சங்களிலிருந்து உணர முடிகிறது. மரத்தால் செய்யப்பட்டது போன்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இவ் வாயில் நிலைக் கல்லால் அமைந்துள்ளது. அருகே சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்து விளக்குகள், பூரண கலசம் ஆகிய சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
நிலைக்காலுக்கு மேலாக மதில் சுவரில் இரண்டு வரிசையாகச் சாரத்துவாரங்களும் அவற்றுக்குக் கீழாகச் சிம்ம வேலைப்பாடுகளுடன் தண்டியங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மரச் சட்டங்களைச் சொருகி மரப் பலகைகளாலும், செம்பு தங்கம் போன்ற தகடுகளாலும் போர்த்தி கோபுர முகப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். இவ்வகை அமைப்புக் கோபுரங்கள் ராஜராஜன் காலத்தில் இருந்தன என்பது அப்பேரரசன் தீட்டியுள்ள தஞ்சை பெருங்கோயிலின் ப்ரஸ்கோ ஓவியங்கள் மூலம் தெரியவருகிறது. தில்லைக் கோபுரங்கள் அனைத்தும் அவ்வகைக் கோபுரங்களாகத்தான் இருந்தன என்பதை ராஜராஜன் தன் மனைவியருடன் தில்லைக்கோயிலில் வழிபடும் காட்சியிலும், சுந்தரர் பதிகம் பாடும் காட்சியிலும் காண முடிகிறது.
ராஜராஜ சோழனின் அரண்மனை, இவ்வாயிலுக்கு அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாமன்னன் இறைவனை வழிபட வரும் திருவாயில் இது என்பதால்தான் இவ்வாயில் பேரழகோடு மங்கலம் பொலிகின்ற திருவாயிலாக அமைந்துள்ளது. இவ்வாயில் வழியாகப் புகுந்து கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலில் மட்டுமே அட்ட மங்கலச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. செம்பு மற்றும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளையடிப்புகளின்போது சிதைந்திருக்க வேண்டும். இவ்வாயில் முக்கியத்துவம் பெற்ற வாயில் என்பதால் மாமன்னன் ராஜராஜன் மெய்க் காவலர்கள் பலரை அங்கு நியமித்திருந்தான் என்பதை அவனது சாசனம் ஒன்று எடுத்துக் கூறுகிறது. அணுக்கன் திருவாயில் போன்றே மற்ற மூன்று வாயில்களும் சேரநாட்டு கோபுர பாணியில் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் மரச்சட்டம் சொருகுவதற்கேற்ற சாரத்துவாரங்களும் தண்டியங்களும் அவ்வாயில்களின் மேற்புறம் உள்ளன.
சேரர் கலைப்பாணியில் கொடுங்கைகள்: தஞ்சைப் பெரியகோயிலைப் பின்னாளில் புதுப்பித்த விஜயநகர அரசர்களும், தஞ்சை நாயக்கர்களும் சேரநாட்டுக் கலைப் பாணியில் திகழும் கூரை அமைப்பை கல்மண்டபங்களின் கொடுங்கைகளில் கட்ட ஒரு புதிய கட்டட மரபைத் தோற்றுவித்தனர். ஸ்ரீராஜராஜேச்சரத்தின் (பெரிய கோயில்) முகமண்டபத்திலும் சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா மண்டபத்திலும் இத்தகைய கொடுங்கைகளைக் காண முடிகிறது. உத்தரத்திலிருந்து ஏறத்தாழ 7 அடி நீளத்துக்கு வளைவுக் கூரையுடன் இக்கொடுங்கைகள் காணப்படுகின்றன.
கீழே மரச்சட்டங்கள், குமிழ் அணிகள், குறுக்குச் சட்டங்கள் என அனைத்தும் கருங்கல் கொண்டே அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பொதுவாக ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைச் சிறப்பாகக் குறிப்பிடுவர். ஆனால் இவற்றையும் விஞ்சும் வகையில் தஞ்சைப் பெரியகோயில் கொடுங்கைகள் விளங்குகின்றன. சேரநாட்டில் இன்றும் பொலிவுடன் திகழும் அக்கலை மரபை சோழ நாட்டிலும் போற்றி புதிய படைப்புக்களை உருவாக்கினர் என்பதற்கு தஞ்சைப் பெரியகோயிலே சிறந்த எடுத்துக்காட்டு.

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், நம்மால் கொண்டாடப்பட வேண்டியவர் யாராக இருக்க முடியும்? கேள்வி நீளமானது. ஆனால், பதில் சுருக்கமானது. குடவாயில் பாலசுப்ரமணியன். பெரிய கோயில் என்றாலே, இன்றைக்கு அரசாங்கத்திலிருந்து ஊடகங்கள் வரை எல்லோரும் அவரைத்தான் தேடுகிறார்கள். கோயில் பற்றி அவர் பேசுவதைக் கேட்பதே ஓர் அலாதியான அனுபவமாக இருக்கிறது. பேசத் தொடங்கிய சில நிமிஷங்களில் சோழர் கால வரலாற்றினூடே நம்மை ஒரு சுற்றுலா அழைத்துச் சென்றுவிடுகிறார் மனிதர். முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது வரலாற்றோடு தத்துவ விசாரங்களிலும் அவருக்கு இருக்கும் ஈடுபாடு. அது நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு எவ்வளவோ சிறப்புகள் உண்டு. அதில் முக்கியமான ஒரு சிறப்பு இந்தக் கோயிலைப் பற்றிய ஆவணங்கள். பொதுவாக, தமிழர்கள் ஆவணப்படுத்துவதில் அசட்டையர்கள் என்பது வரலாற்று காலம் தொட்டு தொடரும் கதை.
இங்குள்ள பல கோயில்களுக்கு நம்மிடத்தில் சரியான வரலாறு கிடையாது. தல புராணங்கள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புனை கதைகளே பெரும்பாலான கோயில்களின் வரலாறு. ஆனால், பெருவுடையார் கோயில் ஒரு விதி விலக்கு. இந்தக் கோயிலின் உருவாக்கத்தில் தொடங்கி நிர்வாகம் வரை தொடர்புடைய நிறைய தகவல்கள் இங்குள்ள கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. சோழர்களுக்குப் பிந்தைய பல்வேறு ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் கோயில் நிர்வகிக்கப்பட்ட விவரம், கோயில் எதிர்கொண்ட தாக்குதல்கள் ஆகிய விவரங்கள் எல்லாம்கூட பல்வேறு ஆவணங்களின் மூலம் அறிய முடிகிறது. ஆனால், சாதாரணர்களை எட்டக்கூடிய வரலாறாக இது இல்லை. இவற்றையெல்லாம் தொகுத்து சாமானியர்களும் அறிந்துகொள்வதற்கேற்ப வரலாற்றைச் சொல்ல வேண்டிய தேவை இந்தக் கோயிலுக்கு இருந்தது. பாலசுப்ரமணியன் அதைப் பூர்த்திசெய்திருக்கிறார்.
தன் வாழ்வில் பெரும் பகுதியை ஆராய்ச்சிக்காகச் செலவிட்டு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 518 பக்கங்களில் அவர் கொண்டு வந்திருக்கும் "இராஜராஜேச்சரம்' புத்தகம், தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய அற்புதமான பெட்டகம்.
ஒரு கோயிலை அணுகுவது எவ்வளவு பெரிய கலை என்று வியக்கச் செய்கிறது. கோயில் நிர்மாணம், அமைப்பு, கட்டுமானச் சிறப்புகள், சிற்பங்கள், ஓவியங்கள், அவை சொல்லும் சேதிகள், வழிபாட்டு முறைகள், வழக்கொழிந்த அம்சங்கள், கோயிலைப் பற்றிய புனை கதைகள் என்று ஒரு கோயிலைப் பற்றிப் பேசவும் கேட்கவும் நமக்கு எவ்வளவு இருக்கின்றன?
எத்தனை வாய்ப்புகள் இருக்குமோ அத்தனை வாய்ப்புகளிலும் புகுந்து வெளியே வருகிறது "இராஜராஜேச்சரம்'. இது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புத்தகமில்லை. ஏராளமான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. ஆனால், இந்தப் புத்தகத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்கூட இப்படியொரு புத்தகம் ஒவ்வொரு கோயிலுக்கும் தேவை என்கிறார்கள்.
குடவாயில் பாலசுப்ரமணியன் இதுவரை 25}க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கல்வெட்டுகள், செப்பேடுகள், அரிய வகை நாணயங்கள், சிற்பங்கள் என்று அவருடைய ஆர்வங்கள் பெரிய அளவில் விரிகின்றன. ஏராளமான கோயில்கள் அவருடைய பணிப் பட்டியலில் வருகின்றன.
ஆனால், பெருவுடையார் தன்னை ஆக்கிரமித்துக்கொண்டார் என்கிறார் பாலசுப்ரமணியன். தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதி இந்தக் கோயில் மீதான கவனத்திலேயே கழிந்திருக்கிறது என்கிறார். புரிகிறது, பாலசுப்ரமணியன். அப்படிப்பட்ட ஒருவரால்தான் இப்படிப்பட்ட ஒரு புத்தகத்தைத் தர முடியும்!
ராஜராஜனின் உள்துறை!
அலுவலர்கள்: பிணக்கறுப்பான், கணக்கன், கீழ்க் கணக்கன், பாடிகாப்பான், தண்டுவான், அடிக்கீழ் நிற்பான்.
நடுநிலையாளன்: கிராமசபை நடைபெறும் போது உதவி செய்வதோடு அங்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நடுநிலையாக இருந்து தீர்ப்பவன்.
கணக்கன்: சபைக்குரிய கணக்கை எழுதுபவன். சபை விரும்பும்போது கணக்கை அவ்வபோது காட்டுவதோடு ஆண்டு இறுதியில் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கீழ்க் கணக்கன்: கணக்கனுக்கு உதவுபவன்.
பாடிகாப்பான்: கலகம், திருட்டு முதலான குற்றங்கள் நிகழாத வகையில் காப்பவன்.
தண்டுவான்: கிராம மக்கள் அரசுக்கு, கொடுக்க வேண்டிய வரிகளை வசூலிப்பவன்.
அடிக்கீழ் நிற்பான்: ஊர்ச் சபையாருக்குச் குற்றேவல் புரிபவன்.
ஊதியங்கள்: மேற்சொன்ன ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு நானாழி நெல், ஆண்டுக்கு ஏழு கழஞ்சு பொன், இரண்டு ஆடைகள் என ஊதியம் வழங்கப்பட்டன.

மர்ம வீரன் ராஜராஜன்!

மன்னன் ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டினான் என்பது தெரியும். அவன் ஒரு மர்ம வீரன் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடற்கொள்ளையர்களைப் பிடிக்க அவன் கடலில் செய்த சாகசங்கள் எத்தனை பேருக்குத் தெரியும். அதிர்ச்சி அடையாதீர்கள். இது வரலாறு அல்ல. புனைவுதான். ஆனால், பார்க்கவும் படிக்கவும் திகட்டாத புனைவு.
இந்தப் புனைகதைக்குச் சொந்தக்காரர்கள் ஓவியர்கள் ப. தங்கம் - சந்திரோதயம் தம்பதி. இவர்கள் படைத்த "மர்ம வீரன் ராஜராஜன்' கதையில்தான் ராஜராஜன் மர்ம வீரனாக இருக்கிறான். இளவரசனான அவன் கடற்கொள்ளையர்களைப் பிடிக்கவும் தன் சகோதரி குந்தவையைக் கொலை முயற்சியிலிருந்து காக்கவும் கடலில் சாகசங்களில் ஈடுபடுகிறான். இறுதியில் கொள்ளையர்களை வீழ்த்தி தங்கையையும், கடல் வணிகர்களையும், நாட்டையும் காக்கிறான்.
ஓவியப் பயணம் குறித்து தங்கம்: ""கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. தமிழகத்தில் சென்னை, கும்பகோணத்தில் மட்டும் ஓவியக் கல்லூரிகள் உள்ளன. 1950-ல் கும்பகோணம் கீழ ஐயன் தெருவில் இருந்த இந்த ஓவியக் கல்லூரிக்குச் சித்திர கலாசாலை என்று பெயர். அதில்தான் 6 ஆண்டுகள் ஓவியம் கற்றுவந்தேன்.
அப்போது கல்கியின் "பார்த்திபன் கனவு', "சிவகாமியின் சபதம்' நம் தமிழக வரலாற்றுப் பின்னணியில் மிகவும் சுவைதரும் சரித்திர கதைகள் கல்கி மூலம் தமிழக வாசகர்களுக்குக் கிடைத்தன. அதன் பின்னர் கல்கி "பொன்னியின்செல்வன்' என்ற புகழ்பெற்ற சரித்திரக்கதையை எழுதினார். அதில் சோழர்கால நிகழ்ச்சிகள், எதிரிகளின் சதித்திட்டம், ரகசிய ஆலோசனைகளை அறிய ஒற்றர்படை இவற்றைக் குறித்தெல்லாம் சுவைபட எழுதியிருந்தார். அதைப் படித்த பின்னர் "பொன்னியின்செல்வன்' கதாபாத்திரங்கள் நம்மிடையே எப்போதும் உலா வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
ராஜராஜ சோழனின் இளமைப் பருவத்தை சித்திரக்கதையாக வரைவதற்கு மனதுக்குள் பெரிய ஆசை எழுந்தது. அப்போதெல்லாம் சாப்பிடும்போதும், நடந்து செல்லும்போதும்கூட அந்தக் காலத்திலேயே வாழ்ந்த உணர்வில் வாழ்ந்து கொண்டிருப்பேன். அதன் விளைவாக உருவானதே வீரசோழன் சித்திரக்கதை'' என்றார்.
தங்கத்தின் மனைவி சந்திரோதயம்: ""கும்பகோணத்தில் 1956-ம் ஆண்டில் குப்புசாமி ஐயரிடம் ஓவியம் கற்றுவந்தேன். அப்போது என் கணவர் நாளிதழ் ஒன்றில் ஓவியராக இருந்தார். அதில் அரேபிய நாயகனான சிந்துபாத்தின் சாகசங்கள் நிறைந்த கன்னித்தீவு மற்றும் கறுப்புக்கண்ணாடி சித்திரக் கதைகளை வரைந்து வந்தார். இந்நிலையில் 1960-ல் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. உடனே என் கணவர் தஞ்சைக்கு வந்துவிட்டார். அதன்பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ஓவியர் மற்றும் புகைப்படக்கலைஞராக பணிபுரிந்தார். நான் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது நாங்கள் இருவரும் சித்திரக்கதை வரையும் ஆர்வத்தில் "தங்கப்பதுமை' என்ற சித்திர வார இதழ் தொடங்கி இளவரசி குந்தவை என்ற முதல் இதழை நடிகர் சிவாஜியின் கைகளால் வெளியிட்டோம்.
அதன் பின்னர் ராஜராஜசோழனின் வரலாற்றுப் பின்னணியில் ஒரு சித்திரக்கதை வரைவதற்கு என் கணவர் எனக்குப் பயிற்சி அளித்தார். அவரது தொடர் ஊக்கத்தின் காரணமாக உருவானதே "மர்ம வீரன் ராஜராஜன்'. அது பல அதிர்ச்சியூட்டும் திருப்பங்களைக் கொண்ட நாவல் போன்றது. அதைப் படிப்பவர்கள் அக்காலத்துக்கே அழைத்துச் செல்லப்படுவதை உணரலாம்.
அதைத் தொடர்ந்து இருவரும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை வைத்து இரண்டாம் ராஜராஜனின் வரலாற்றுப் பின்னணியில் ராஜகம்பீரன் என்ற சித்திரக் கதையை வரைந்து வெளியிட்டோம்.''என்றார் சந்திரோதயம்.

பெரிய கோவில் கட்டப்பட்டது எப்படி

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
பெரிய கோயில் அளவுகோல்...
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்
1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்
13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள
உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சோழர் நகரம்!
தெருக்கள்
(தஞ்சாவூர்ப் புறம்படி)
காந்தர்வத் தெரு, மடைப்பள்ளித் தெரு, வில்லிகள் தெரு, ஆணைகடுவார் தெரு, ஆனை ஆட்கள் தெரு, பன்மையார் தெரு, சாலியத் தெரு.
பெருந்தெருக்கள்
மும்முடிச்சோழப் பெருந்தெரு, நித்தவினோதப் பெருந்தெரு, வீரசிகாமணிப் பெருந்தெரு, வீரசோழப் பெருந்தெரு, செயங்கொண்ட சோழப் பெருந்தெரு, இராசவித்யாதரப் பெருந்தெரு, சூரசிகாமணிப் பெருந்தெரு.
சோழ மன்னர்கள் பெயரில் ஆறுகள்
முடி கொண்ட சோழப் பேராறு, தண் பொருத்தமான முடி கொண்ட சோழப் பேராறு, சுங்கந் தவிர்த்த சோழப் பேராறு, அகளங்கப் பேராறு, மதுராந்தக வடவாறு, வீரசோழ வடவாறு, வீரராசேந்திர சோழ வடவாறு, விக்கிரமனாறு, கரி
காலச் சோழப் பேராறு (கொள்ளிடம்), வீரசோழனாறு.
பேரங்காடி
(தற்போதைய சூப்பர் மார்க்கெட் முறை) திரிபுவன மாதேவி பேரங்காடி.
சோழர்கால நாணயங்கள்

கி.பி. 985}1014 காலகட்டத்தில் இலங்கையில்
ராஜராஜ சோழனால்
புழக்கத்துக்கு விடப்பட்ட
தங்க நாணயங்கள்.