Friday, April 30, 2010

தஞ்சாவூர் கோவில்

தஞ்சை பெரிய கோயில் 1000-வது ஆண்டு விழா தொடங்குவது எப்போது?

தஞ்சாவூர், ஏப். 29: தஞ்சாவூர் பெரிய கோயில் நிர்மாணிக்கப்பட்ட 1,000-வது ஆண்டு விழா எப்போது தொடங்கும், எந்த வகையில் விழா நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

உறுதியான ஆதாரங்கள் இல்லையென்றாலும்கூட, கி.பி. 1,010 ஆம் ஆண்டு, ஏப்ரல் 22-ம் தேதி பெரிய கோயில் நிர்மாணிக்கப்பட்டு, முதல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்தவகையில், பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு 1,001 ஆம் ஆண்டும் வந்து விட்டது. ஆனால், இன்று வரை 1,000-வது ஆண்டு விழாவை நடத்துவது குறித்து அரசுத் தரப்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத காலத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1,004 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, ஆறே ஆண்டுகளில், அதாவது கி.பி. 1,010-ல் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது தஞ்சாவூர் பெரிய கோயில்.

இன்று, உலகமே வியக்கும் வகையில், தமிழர்களின் கட்டடக் கலைநுட்பத்துக்குச் சான்றாக, யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் என்ற அங்கீகாரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.

இத்தகையை, தமிழ் கலாசாரத்தின் கௌரவச் சின்னமாகத் திகழும் பெரிய கோயிலின் 1,000-வது ஆண்டு விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாட பெரிய கோயிலை அழகுபடுத்தும் பணிகளாக ஒலி-ஒளிக் காட்சி அமைப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தொல்லியல் துறை அனுமதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அனுமதி தரப்படவில்லை.

ஒலி-ஒளிக் காட்சிகளால் கோயிலில் இருக்கும் பாரம்பரியச் சிற்ப வேலைபாடுகளுக்கு சேதம் ஏற்பட்டுவிடுமோ, காட்சி நேரங்களால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுமோ என்றெல்லாம் தொல்லியல் துறை கேள்விகள் எழுப்பி, அனுமதி அளிக்க யோசித்துக் கொண்டிருக்கிறது.

1000 ஆண்டுகள் என்ற சிறப்புக்காக அரசுத் தரப்பில் நாணயங்கள், அஞ்சல் தலைகள் வெளியிட முயற்சிப்பது வரவேற்கக்கூடியது. அதேநேரம், பெரிய கோயிலின் முன்புறம் முள்புதர்கள் மண்டி, கழிவுநீர் குளமாகிக் கிடக்கும் அகழியை, தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து, அதில் படகு சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் சீரமைத்து, பெரிய கோயிலின் கம்பீரத்துக்கு மேலும் அழகூட்டும் திட்டத்தை சுமார் 75 ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டிருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது.

தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது மேம்பாலம், சுற்றுச் சாலை, பேருந்து நிலையம் என்று நகரை விரிவுபடுத்தும் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோல, பெரிய கோயிலின் 1,000-வது ஆண்டு விழா நினைவாகவும் நகரை மேம்படுத்தும் திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது நகர மக்களின் விருப்பமாக உள்ளது.

இதுதொடர்பாக தொல்லியல் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறியது:

பெரிய கோயிலில் இருக்கும் காட்சிப் பொருள்கள் கலைக் கூடத்தை புதுப்பொலிவுடன் நவீனப்படுத்த வேண்டும். 1,000-வது ஆண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தி, மாநில அளவில் பரிசுகள் அளிக்க வேண்டும். கோயில் பராமரிப்புக்கும், அழகுபடுத்தும் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார் பாலசுப்பிரமணியம்.

விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம் கூறியது:

மாநில தலைமைச் செயலர் தலைமையில் சுற்றுலாத் துறை, கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறை செயலர்கள் அடங்கிய குழுவை கடந்த வாரம் அரசு அமைத்துள்ளது. இவர்கள் இரண்டு கூட்டங்கள் நடத்தி விழா ஏற்பாடுகள் குறித்து விவாதித்துள்ளனர். அதன் விவரம் விரைவில் தெரிய வரலாம்.

ஜூலை மாதத்தில் விழா தொடங்கப்படலாம். பெரியகோயில் 1,000-வது ஆண்டு விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றார் சண்முகம்.

தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்ட 350-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது போல, மூன்று மடங்கு சிறப்பாக தஞ்சாவூர் பெரிய கோயிலின் 1,000-வது ஆண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்ற தஞ்சை மாவட்ட மக்களின் ஆசை பேராசையல்ல, நியாயமானதுதான்.