Sunday, September 26, 2010

மர்ம வீரன் ராஜராஜன்!

மன்னன் ராஜராஜ சோழன் தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டினான் என்பது தெரியும். அவன் ஒரு மர்ம வீரன் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடற்கொள்ளையர்களைப் பிடிக்க அவன் கடலில் செய்த சாகசங்கள் எத்தனை பேருக்குத் தெரியும். அதிர்ச்சி அடையாதீர்கள். இது வரலாறு அல்ல. புனைவுதான். ஆனால், பார்க்கவும் படிக்கவும் திகட்டாத புனைவு.
இந்தப் புனைகதைக்குச் சொந்தக்காரர்கள் ஓவியர்கள் ப. தங்கம் - சந்திரோதயம் தம்பதி. இவர்கள் படைத்த "மர்ம வீரன் ராஜராஜன்' கதையில்தான் ராஜராஜன் மர்ம வீரனாக இருக்கிறான். இளவரசனான அவன் கடற்கொள்ளையர்களைப் பிடிக்கவும் தன் சகோதரி குந்தவையைக் கொலை முயற்சியிலிருந்து காக்கவும் கடலில் சாகசங்களில் ஈடுபடுகிறான். இறுதியில் கொள்ளையர்களை வீழ்த்தி தங்கையையும், கடல் வணிகர்களையும், நாட்டையும் காக்கிறான்.
ஓவியப் பயணம் குறித்து தங்கம்: ""கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. தமிழகத்தில் சென்னை, கும்பகோணத்தில் மட்டும் ஓவியக் கல்லூரிகள் உள்ளன. 1950-ல் கும்பகோணம் கீழ ஐயன் தெருவில் இருந்த இந்த ஓவியக் கல்லூரிக்குச் சித்திர கலாசாலை என்று பெயர். அதில்தான் 6 ஆண்டுகள் ஓவியம் கற்றுவந்தேன்.
அப்போது கல்கியின் "பார்த்திபன் கனவு', "சிவகாமியின் சபதம்' நம் தமிழக வரலாற்றுப் பின்னணியில் மிகவும் சுவைதரும் சரித்திர கதைகள் கல்கி மூலம் தமிழக வாசகர்களுக்குக் கிடைத்தன. அதன் பின்னர் கல்கி "பொன்னியின்செல்வன்' என்ற புகழ்பெற்ற சரித்திரக்கதையை எழுதினார். அதில் சோழர்கால நிகழ்ச்சிகள், எதிரிகளின் சதித்திட்டம், ரகசிய ஆலோசனைகளை அறிய ஒற்றர்படை இவற்றைக் குறித்தெல்லாம் சுவைபட எழுதியிருந்தார். அதைப் படித்த பின்னர் "பொன்னியின்செல்வன்' கதாபாத்திரங்கள் நம்மிடையே எப்போதும் உலா வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
ராஜராஜ சோழனின் இளமைப் பருவத்தை சித்திரக்கதையாக வரைவதற்கு மனதுக்குள் பெரிய ஆசை எழுந்தது. அப்போதெல்லாம் சாப்பிடும்போதும், நடந்து செல்லும்போதும்கூட அந்தக் காலத்திலேயே வாழ்ந்த உணர்வில் வாழ்ந்து கொண்டிருப்பேன். அதன் விளைவாக உருவானதே வீரசோழன் சித்திரக்கதை'' என்றார்.
தங்கத்தின் மனைவி சந்திரோதயம்: ""கும்பகோணத்தில் 1956-ம் ஆண்டில் குப்புசாமி ஐயரிடம் ஓவியம் கற்றுவந்தேன். அப்போது என் கணவர் நாளிதழ் ஒன்றில் ஓவியராக இருந்தார். அதில் அரேபிய நாயகனான சிந்துபாத்தின் சாகசங்கள் நிறைந்த கன்னித்தீவு மற்றும் கறுப்புக்கண்ணாடி சித்திரக் கதைகளை வரைந்து வந்தார். இந்நிலையில் 1960-ல் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. உடனே என் கணவர் தஞ்சைக்கு வந்துவிட்டார். அதன்பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் ஓவியர் மற்றும் புகைப்படக்கலைஞராக பணிபுரிந்தார். நான் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது நாங்கள் இருவரும் சித்திரக்கதை வரையும் ஆர்வத்தில் "தங்கப்பதுமை' என்ற சித்திர வார இதழ் தொடங்கி இளவரசி குந்தவை என்ற முதல் இதழை நடிகர் சிவாஜியின் கைகளால் வெளியிட்டோம்.
அதன் பின்னர் ராஜராஜசோழனின் வரலாற்றுப் பின்னணியில் ஒரு சித்திரக்கதை வரைவதற்கு என் கணவர் எனக்குப் பயிற்சி அளித்தார். அவரது தொடர் ஊக்கத்தின் காரணமாக உருவானதே "மர்ம வீரன் ராஜராஜன்'. அது பல அதிர்ச்சியூட்டும் திருப்பங்களைக் கொண்ட நாவல் போன்றது. அதைப் படிப்பவர்கள் அக்காலத்துக்கே அழைத்துச் செல்லப்படுவதை உணரலாம்.
அதைத் தொடர்ந்து இருவரும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலை வைத்து இரண்டாம் ராஜராஜனின் வரலாற்றுப் பின்னணியில் ராஜகம்பீரன் என்ற சித்திரக் கதையை வரைந்து வெளியிட்டோம்.''என்றார் சந்திரோதயம்.

No comments:

Post a Comment