Sunday, September 26, 2010

சோழனின் பெரியகோயிலும்.. சேரனின் நுழைவாயிலும்!

தஞ்சைப் பெரிய கோயிலை சோழ மன்னனான ராஜராஜன் உருவாக்கியிருந்தாலும், அக் கோயிலில் சேர நாட்டின் கலைப்பாணியையும் உள்ளடக்கியிருந்த கட்டுமானங்கள் உள்ளது தற்போதைய ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னன் ராஜராஜனின் கல்வெட்டுகளில் கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் என இரண்டு கோபுரங்களைக் குறிப்பிடுகின்றன. அதைப் போலவே அப்பேரரசின் மற்றொரு கல்வெட்டு இந்தக் கோயிலில் உள்ள அணுக்கன் திருவாயில் என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறது. இது திருமதிலின் வடமேற்குப் பகுதியில் வடபுறத் திருவாயிலாகும். இவ்வாயில் பற்றியும், திருச்சுற்று மாளிகையின் மேற்கு மற்றும் தெற்கு மதில்களில் உள்ள மற்ற மூன்று வாயில்கள் பற்றியும் இதுவரைக் கட்டடக் கலை வல்லுநர்களால் ஆராயப்பட்ட எந்த ஒரு கருத்தும் வெளியிடப்படவில்லை.
அணுக்கன் திருவாயிலும் மற்ற மூன்று வாயில்களும் ராஜராஜன் திருவாயில் போன்று தமிழக பாணி கோபுரங்களாக அமையாமல், சேர நாட்டுக் கோபுர கலைப் பாணியில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளோடு திகழ்ந்திருக்க வேண்டும் என்பதைக் கட்டுமான அமைப்பின் மூலம் உணரமுடிகிறது.
இந்த நான்கு வாயில்களில் அணுக்கன் திருவாயிலே மிகுந்த எழிலோடு படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்பதை அங்கு காணப்படும் எச்சங்களிலிருந்து உணர முடிகிறது. மரத்தால் செய்யப்பட்டது போன்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இவ் வாயில் நிலைக் கல்லால் அமைந்துள்ளது. அருகே சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்து விளக்குகள், பூரண கலசம் ஆகிய சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
நிலைக்காலுக்கு மேலாக மதில் சுவரில் இரண்டு வரிசையாகச் சாரத்துவாரங்களும் அவற்றுக்குக் கீழாகச் சிம்ம வேலைப்பாடுகளுடன் தண்டியங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மரச் சட்டங்களைச் சொருகி மரப் பலகைகளாலும், செம்பு தங்கம் போன்ற தகடுகளாலும் போர்த்தி கோபுர முகப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். இவ்வகை அமைப்புக் கோபுரங்கள் ராஜராஜன் காலத்தில் இருந்தன என்பது அப்பேரரசன் தீட்டியுள்ள தஞ்சை பெருங்கோயிலின் ப்ரஸ்கோ ஓவியங்கள் மூலம் தெரியவருகிறது. தில்லைக் கோபுரங்கள் அனைத்தும் அவ்வகைக் கோபுரங்களாகத்தான் இருந்தன என்பதை ராஜராஜன் தன் மனைவியருடன் தில்லைக்கோயிலில் வழிபடும் காட்சியிலும், சுந்தரர் பதிகம் பாடும் காட்சியிலும் காண முடிகிறது.
ராஜராஜ சோழனின் அரண்மனை, இவ்வாயிலுக்கு அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாமன்னன் இறைவனை வழிபட வரும் திருவாயில் இது என்பதால்தான் இவ்வாயில் பேரழகோடு மங்கலம் பொலிகின்ற திருவாயிலாக அமைந்துள்ளது. இவ்வாயில் வழியாகப் புகுந்து கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலில் மட்டுமே அட்ட மங்கலச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. செம்பு மற்றும் தங்கத் தகடுகள் போர்த்தப்பட்டிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்கால கொள்ளையடிப்புகளின்போது சிதைந்திருக்க வேண்டும். இவ்வாயில் முக்கியத்துவம் பெற்ற வாயில் என்பதால் மாமன்னன் ராஜராஜன் மெய்க் காவலர்கள் பலரை அங்கு நியமித்திருந்தான் என்பதை அவனது சாசனம் ஒன்று எடுத்துக் கூறுகிறது. அணுக்கன் திருவாயில் போன்றே மற்ற மூன்று வாயில்களும் சேரநாட்டு கோபுர பாணியில் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் மரச்சட்டம் சொருகுவதற்கேற்ற சாரத்துவாரங்களும் தண்டியங்களும் அவ்வாயில்களின் மேற்புறம் உள்ளன.
சேரர் கலைப்பாணியில் கொடுங்கைகள்: தஞ்சைப் பெரியகோயிலைப் பின்னாளில் புதுப்பித்த விஜயநகர அரசர்களும், தஞ்சை நாயக்கர்களும் சேரநாட்டுக் கலைப் பாணியில் திகழும் கூரை அமைப்பை கல்மண்டபங்களின் கொடுங்கைகளில் கட்ட ஒரு புதிய கட்டட மரபைத் தோற்றுவித்தனர். ஸ்ரீராஜராஜேச்சரத்தின் (பெரிய கோயில்) முகமண்டபத்திலும் சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா மண்டபத்திலும் இத்தகைய கொடுங்கைகளைக் காண முடிகிறது. உத்தரத்திலிருந்து ஏறத்தாழ 7 அடி நீளத்துக்கு வளைவுக் கூரையுடன் இக்கொடுங்கைகள் காணப்படுகின்றன.
கீழே மரச்சட்டங்கள், குமிழ் அணிகள், குறுக்குச் சட்டங்கள் என அனைத்தும் கருங்கல் கொண்டே அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். பொதுவாக ஆவுடையார் கோயில் கொடுங்கைகளைச் சிறப்பாகக் குறிப்பிடுவர். ஆனால் இவற்றையும் விஞ்சும் வகையில் தஞ்சைப் பெரியகோயில் கொடுங்கைகள் விளங்குகின்றன. சேரநாட்டில் இன்றும் பொலிவுடன் திகழும் அக்கலை மரபை சோழ நாட்டிலும் போற்றி புதிய படைப்புக்களை உருவாக்கினர் என்பதற்கு தஞ்சைப் பெரியகோயிலே சிறந்த எடுத்துக்காட்டு.

No comments:

Post a Comment